×

தேனியில் அயிரை மீன் கிலோ ரூ.2000 அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

தேனி, டிச. 9: தேனியில் வெங்காயம் விலை கிலோவிற்கு 150 ரூபாயைக் கடந்து விட்ட நிலையில், மீன் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. அயிரை மீன் விலை கிலோ 2 ஆயிரம் ரூபாயினைக் கடந்துள்ளது.தேனி மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, அயிரை மீன்களை பிடிப்பது சவாலாக உள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் வலை போட்டு பிடித்து அயிரை மீன் பிடிக்கின்றனர். குறிப்பாக சீலையம்பட்டி, கொட்டகுடி, போடி, கோட்டூர், வீரபாண்டி பகுதிகளிலும், கம்பம், காமயகவுண்டன்பட்டி பகுதிகளிலும் அயிரை மீன்கள் பிடிக்கப்படுகிறது. மீன்கள் குறைவாக இருப்பதால் ஒரு கிலோ மீன் தேனி மார்க்கெட்டிலேயே கிலோ 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பலத்த மழை காரணமாக கண்மாய்களிலும் மீன்கள் கிடைக்கவில்லை. மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதும் குறைந்து விட்டது. எனவே, மீன் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று தேனி மார்க்கெட்டில் மீன் விலை இறால் மீன் கிலோ 600 ரூபாய், அயிலை 200 ரூபாய், வாழை 150 ரூபாய், கட்லா 200 ரூபாய், பாறை 180 ரூபாய், ஜிலேபி 140 ரூபாய், மத்தி 160 ரூபாய், நகரை 250 ரூபாய், நண்டு 400 ரூபாய், நெத்திலி 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஏற்கனவே சின்ன வெங்காயம் விலை கிலோ 150 ரூபாய், பெல்லாரி வெங்காயம் 170 ரூபாயையும் கடந்துள்ள நிலையில், அனைத்து வகை காய்கறிகளின் விலைகளும் உயர்ந்துள்ளது.இந்நிலையில் ஆட்டு இறைச்சி 800 ரூபாய், நாட்டுக்கோழி 450 ரூபாய் என இறைச்சி விலைகளும் உயர்ந்துள்ளது. இதுவரை கார்த்திகை மாதத்தில் இவ்வளவு விலை உயர்வு இருந்தது இல்லை என சைவ, அசைவ பிரியர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.



Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு