×

நாகர்கோவிலில் பூண்டு விலை ₹240 ஆக உயர்வு ஒரு கிலோ வெங்காயம் ₹180க்கு விற்பனை

நாகர்கோவில், டிச.9: நாகர்கோவிலில் ஒரு கிலோ பல்லாரி, சின்ன வெங்காயம் கிலோ ₹180க்கு விற்பனை செய்யப்படுகிறது.நாடு முழுவதும் பல்லாரி, சின்ன வெங்காயம் போன்றவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மழை காரணமாக இம்மாநிலங்களில் வெங்காய விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு வெங்காயத்திற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பதுக்கி வைத்தவர்கள் கடுமையான லாபம் அடைவதற்காக தற்போது அவற்றை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் வெங்காய விலையேற்றத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் வெங்காயம் விலை நாள்தோறும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.15, ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பல்லாரி விலை இன்று 10 மடங்கு உயர்ந்துள்ளது. தினசரி விலை உயர்ந்து வருவதும் பொதுமக்களை கடுமையாக வாட்டியுள்ளது. நாகர்கோவிலில் ஒரு கிலோ பல்லாரி (பெரிய வெங்காயம்), சின்ன வெங்காயம் ஆகியவை ஒரு கிலோ தலா ரூ.180க்கு விற்பனையாகிறது. பூண்டு கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.45க்கும், தக்காளி கிலோ ரூ.30க்கும் விற்பனையாகிறது. காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. இது கார்த்திகை மாதம் என்பதால் காய்கறிகள் விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதே போன்று பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலையும் தாறுமாறாக உயரத்தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் ஒரு கிலோ உடைத்த உழுத்தம் பருப்பு ரூ.128க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசி பயிறு ரூ.120க்கு விற்பனையாகிறது. பெரும் பயிறு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனை போன்று பல்வேறு உணவு தானிய பொருட்களின் விலையும், மாவு பொருட்களின் விலையும் உயரத்தொடங்கியுள்ளது. வெங்காயம் விலை உயர்ந்துள்ள வேளையில் மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவது ஏழை குடும்பங்களை கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது.வெங்காய விலையேற்றம் ஓட்டல்களில் ஆம்லெட் விற்பனையையும் கடுமையாக பாதித்துள்ளது. சில கடைகளில் ஆம்லெட் போடுவதை நிறுத்திவிட்டனர். சில இடங்களில் முட்டைகோஸ் பயன்படுத்தி ஆம்லெட் போடப்படுகிறது. இதனை உணவு பிரியர்கள் விரும்புவது இல்லை.வெங்காயம் சமையலில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்ட நிலையில் ஒரு கிலோ இரண்டு கிலோ என்று வாங்கி சென்றவர்கள் தற்போது 100 கிராம், 200 கிராம் என்று வாங்கி செல்கின்ற நிலை உள்ளது. எப்போது விலை குறையும் என்ற தகவல் ஏதும் வெளியாகாததால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Tags : Nagercoil ,
× RELATED நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்