×

குமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள் குவிந்தனர்

நாகர்கோவில், டிச.5: குமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களில் சேருவதற்கான விண்ணப்பங்களை வாங்க ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். குமரி மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள 18 ஆண் மற்றும் 2 பெண் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் விநியோகம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. இதில் பட்டபடிப்பு முடித்தவர்கள், ெபாறியியல் பட்டதாரிகள் என ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பங்களை வாங்க குவிந்தனர்.  வழக்கமாக ஊர்காவல் படையில் பணியாற்றிட 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் வருவார்கள். ஆனால் நேற்று விண்ணப்பம் வாங்க 20, 25 வயது இளைஞர்கள் பெருமளவில் திரண்டு இருந்தனர். நேரம் செல்ல, செல்ல இளைஞர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் எஸ்.பி. அலுவலக வளாகத்துக்கு வெளியேயும் நீண்ட வரிசை நின்றது. ஒரு கட்டத்தில் சாலை வரை வரிசை சென்றது. எனவே போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டதால், வரிசை ஆக பிரித்து நிறுத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய விண்ணப்ப வினியோகம் மாலை 5 மணி வரை நடந்தது. பெண்கள் பணியிடத்துக்கு 10 பேர் தான் வந்து இருந்தனர். ஆண்கள் பணியிடத்துக்கு தான் அதிகளவில் இளைஞர்கள் திரண்டனர்.  

இன்றும் விண்ணப்பம் விநியோகம் நடக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 13.12.19ம் தேதிக்குள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என முகவரியிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். 13.12.19க்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உடல் ஆரோக்கியமானவர்கள், நல்லொழுக்கம் உடையவர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஊர்காவல் படையில் 3 வருடம் பணிபுரிய விருப்பம் உடையவர்களாக இருக்க வேண்டும். பணியில் சேர்கிறவர்களுக்கு மாதம் 5 அழைப்பு பணி வழங்கப்படும். ஒரு அழைப்பு பணிக்கு ரூ.560 ஊதியம் மற்றும் பரேடுக்கு ரூ.55 என மாதம் ரூ.2,855 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இன்றும் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று ெகாள்ளலாம் என்று எஸ்.பி. ஸ்ரீநாத் கூறி உள்ளார்.

Tags : district ,Kumari ,guard force ,
× RELATED குமரியில் ஒரே நாளில் 141 பேர் கொரோனா...