×

பண்ணைப்புரத்தில் மழை கொத்தமல்லி செடி அழுகல்

தேவாரம், டிச.4: பண்ணைப்புரம் பகுதிகளில் மழைகாரணமாக கொத்தமல்லி விவசாயம் பாதிப்பை அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பண்ணைப்புரம், கோம்பை, கருக்கோடை, உ.அம்பாசமுத்திரம், டி.சிந்தலைசேரி உள்ளிட்ட ஊர்களில் கொத்தமல்லி விவசாயம் நடக்கிறது. இங்கு விளையக்கூடிய கொத்தமல்லி அதிகளவில் தினந்தோறும் தேவாரம், தேனி, மதுரை மார்க்கெட்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு தென்மாவட்டங்களில் பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. திடீரென மாலை நேரங்களில் பெய்யக்கூடிய மழையினால் இப்போது கொத்தமல்லி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தோட்டங்களுக்குள் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் மழை தண்ணீரும் அதிகளவில் இலைகளில் படர்வதால் இதனை மிக கண்காணிப்பாக பார்க்கவேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். மழை தொடர்ந்து நீடிப்பதால் வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் தேங்கும் என்பதால் காலை நேரத்திலேயே மழையினால் தேங்ககூடிய தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மழையினால் வளர்ந்த செடிகள் அழுகளை சந்திக்கும் என்பதால் இதனை உடனடியாக பறிக்கவேண்டிய நிர்ப்பந்தம் விவசாயிகளுக்கு உண்டாகி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மலையடிவாரத்தை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் ஊர்ப்புற தோட்டங்களில் மல்லித்தழை விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வயலில் தண்ணீர் தேங்கி கொத்தமல்லி செடிகள் அழுகி வருகின்றன. இது பாதிப்பில்லாமல் வளரும்பட்சத்தில் அதிகவிலை கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கணக்கெடுக்க வேண்டும் என்றனர்.

Tags : farmland ,
× RELATED கொள்ளிடத்தில் தொடர்ந்து...