×

ஆதி திராவிடர்,பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம் கல்வி உதவித்தொகை

திருப்பூர், நவ.20:  திருப்பூர், மாவட்டம் கனரா வங்கி சார்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று வழங்கினார்.
 திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று கனரா வங்கியின் 114வது  நிறுவனர் நாள் விழா நடந்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவிகளுக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் உதவித்தொகையை அடுத்த பணிக்கு ஒரு தூண்டுகோலாக பார்க்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் அனைத்து வகையான போட்டிகளிலும் முழு தன்னம்பிக்கையோடு கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். மேலும், உதவித்தொகை பெறும் மாணவிகள் நல்ல முறையில் படித்து தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்றார்.

 விழாவில், மாவட்டத்திலுள்ள 29 பள்ளிகளை சேர்ந்த 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவிகளுக்கு தலா ரூ.2500 மற்றும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 100 மாணவிகளுக்கு தலா ரூ.5000 என மொத்தம் 200 மாணவிகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான உதவித்தொகை  வழங்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமேஷ், கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பள்ளி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்