×

பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டுகோள்

திருப்பூர், நவ.20:  இயற்கையை பாழ்படுத்தும் சாயம் கலந்த ஆடைகளை பொதுமக்கள் தவிர்த்து பருத்தி ஆடைகளை பயன்படுத்த இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகின் முன்னேறிய நாடுகள் இயற்கையை காக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இயற்கை விவசாயம், ரசாயன ஆலைகள் தவிர்த்தல், மழை நீர் சேமிப்பு, மரங்கள் வளர்ப்பு, நீர், காற்று, மண் ஆகியவற்றை மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதிப்பதில்லை. இதனால், அவர்கள் நோயற்ற வாழ்க்கை வாழ்கின்றனர்.  இந்தியாவில் அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி, உணவு தானிய பொருட்கள் அதிக விளைச்சலுக்கு அதிகமான பூச்சி மருந்து பயன்படுத்துதல், மரங்களை அழித்தல், துணிகளுக்கு பல்வேறு கலர்கள் சேர்க்க ரசாயன கலவைகள் சேர்க்கும்போது அதிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர், நீர் நிலைகளில் கலந்து மண் வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீரில் அமில தன்மை அதிகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பொருட்களில் அதிக வளர்ச்சிக்காக ரசாயனம் அதிகளவு சேர்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள், கெயில் காஸ் குழாய்கள், காற்றாலைகள், மருத்துவ கழிவுகளை அரைக்கும் தொழிற்சாலைகள், மதுபான ஆலைகள், ஹெட்ரோ-கார்பன் திட்டம் உட்பட ரசாயன ஆலைகளை அமைத்து மாசு நிறைந்த பகுதியாக மாறிவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் காய்கறிகள், குடிநீர், தானிய வகைகளை வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது.  அபாயகரமான தொழிற்சாலைகளில் வேலை பார்க்க தமிழக தொழிலாளர்கள் முன்வருவது இல்லை. இதனால், வடமாநிலத்தை ேசர்ந்த 2 கோடி பேர் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழகத்தில் மனிதர்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. சாயம் கலந்த ஆடைகளை தவிர்த்து, சாயம் கலக்காத பருத்தி ஆடைகளையும், இயற்கை முறையில் காய்கறிகள், தானியங்களை உற்பத்தி செய்து பயன்படுத்த பொதுமக்கள் முன் வரவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்