×

ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூரில் ரயில்வே சுரங்கப்பாதையில் கலெக்டர் ஷில்பா ஆய்வு

கடையம், நவ. 20: ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் ரயில்வே சுரங்கப் பாதையில் கலெக்டர் ஷில்பா ஆய்வு மேற்கொண்டார். ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட செங்கானூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ரயில் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதையை ரயில்வே துறை அமைத்துள்ளது. மழை காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மோட்டாரும் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் மழை நேரங்களில் சுரங்கப் பாதையில் மழைநீருடன் ஊற்றும் அதிகளவில் பெருக்கெடுப்பதால் மோட்டார் மூலம் முழுமையாக தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுரங்கப்பாதையை செங்கானூர் கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தண்ணீரில் இறங்கி செல்வதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் மாற்றுப் பாதை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி சார்பில் மேலும் இரண்டு டீசல் மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. ஆனாலும் தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாததால் பொதுமக்கள் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதையை நேரில் பார்வையிட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் மாற்றுப் பாதை அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை மாற்றுப் பாதை அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், செங்கானூர் சுரங்கப் பாதையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாற்றுப் பாதை அமைப்பதற்கான இடங்கள் மற்றும் வழிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாற்றுப் பாதை அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதியாக மாற்றுப் பாதை அமைக்கப்படும் என்று கிராம மக்களிடம் தெரிவித்தார்.ஆய்வின் போது சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதிக் தயாள், நெல்ைல மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாஹிம் அபுபக்கர், அம்பை தாசில்தார் வெங்கடேசன், ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சாந்தி, வருவாய் ஆய்வாளர் சங்கரவடிவு, கிராம நிர்வாக அலுவலர் டேவிட் கிங்க்ஸ்லின் சாமுவேல், ஆழ்வார்குறிச்சி அதிமுக நகர செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Collector ,Railway Tunnel ,Alappuzhakurichi ,Chengannur ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...