×

பாபநாசம் ஆற்றை தூய்மையாக வைக்க பரிகார பூஜை நடத்துவோருடன் நகராட்சி ஆலோசனை

வி.கே.புரம், நவ. 20: பாபநாசம் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக வைப்பதற்காக பரிகார பூஜை நடத்துவோருடன் நகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கைலாயத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். இத்தகைய சிறப்பு பெற்ற திருத்தலமான பாபநாசம் நெல்லை மாவட்டம் விகேபுரத்தை அடுத்து அமைந்துள்ளது.அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் மகனான துவஷ்டா என்பவரை கொன்றதால் தேவர்களின் அரசனான இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிய இடம், அகத்தியரின் சீடரான ரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் 9 தாமரை மலர்களை மிதக்கவிட அதில் முதல் மலர் மிதந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டதாக புகழப்படுகிறது பாபநாசம் திருத்தலம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. பொதிகை மலையில் உருவாகி மலைகளில் தவழ்ந்து வரும் தாமிரபரணி நதி இந்தக் கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான, பல்வேறு வரலாற்றுச் சிறப்புகள் பெற்ற நெல்லை மாவட்டம் பாபநாசம் கோயிலுக்கு வழிபட வருவோரில் பலர் ஜோதிடர்களின் வழிகாட்டுதலில் பரிகாரபூஜைகள் செய்து, தாமிரபரணியில் புனித நீராடும் போது தாங்கள் அணிந்திருக்கும் துணிகளை ஆற்றினுள் களைந்து விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு விடப்படும் துணிகள், ஆற்றில் குளிப்பவர்களின் கால்களில் சிக்கி உயிருக்கு ஆபத்தை உருவாக்குகின்றன. இதை தடுக்க பக்தர்கள் அமைப்பினர் பல முயற்சிகள் செய்தும் இதுவரை பெரிய பலன்கள் ஏதும் இல்லை.கடந்த ஆண்டு தாமிரபரணியில் நடந்த புஷ்கர விழாவை முன்னிட்டு புனித நீராட லட்சக்கணக்கானோர் பாபநாசத்தில் குவிந்ததால் தினமும் பல நூறுகிலோ துணி கழிவுகள் ஆற்றில் விடப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் அமைப்பினர், நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றின் கரைகளில் சிறப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு கழிவு துணிகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.தொடர்ந்து நகராட்சி சார்பில் தாமிரபரணியில் தேங்கிக் கிடக்கும் துணிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.  வாரம்தோறும் பல மூடை கழிவு துணிகள் சேகரமாகிறது. இந்நிலையில் தாமிரபரணியை தூய்மையாக வைப்பது தொடர்பாக பாபநாசத்தில் பரிகார பூஜை செய்வோருடன் ஆலோசனை நடத்த நகராட்சி முடிவு செய்தது.

அதன்படி நேற்று கோயில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் காஞ்சனா தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுகாதார மேற்பார்வையாளர் மில்லர், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட பரிகார பூஜை செய்பவர்கள், தங்களிடம் பூஜைக்கு வருபவர்களிடம் தாமிரபரணி நதியில் துணிகள் மற்றும் இதர பொருட்களை போடச் சொல்லி அறிவுறுத்த மாட்டோம். துணிகள், இதர பொருட்களை நதியில் விடுவது பாவம் என்பதை எடுத்துக் கூறி அதற்கென வைக்கப்பட்டுள்ள தனி தடுப்புகளில் அவற்றை விடக்கூறுவோம் என உறுதியளித்தனர். இதன்மூலம் இனி பாபநாசம் தாமிரபரணியில் துணி கழிவுகள் வீசப்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : puja holders ,Parikrama ,river ,Papanasam ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை