×

ஆற்காடு அருகே சாலை பணியால் வாகனங்கள் செல்ல தடை

ஆற்காடு, நவ.13:  ஆற்காடு அருகே நேற்று நடைபெற்ற சாலை பணியால் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஆற்காடு அடுத்த காவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து புங்கனூர் வரை  தார்சாலை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று காலை 9 மணி முதல் காவனூர், புங்கனூர் பஸ் நிறுத்தம் அருகே காலி பேரல்கள் மற்றும் வாகனங்களை குறுக்கே நிறுத்தி அவ்வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மாலையில் பள்ளி முடித்து தனியார் பள்ளி பஸ்களும், வேன்களும் மாணவர்களை அவ்வழியாக கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், மாணவர்கள் தங்களது வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டனர். வழக்கமாக  வீட்டிற்கு வந்துவிடும் தங்களது பிள்ளைகள் வர தாமதமானதால் பெற்றோர்களும்  அச்சமடைந்தனர்.
இதனால், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஆட்டோக்களிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் மாணவர்களை அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். ஆனால், அரசு பள்ளியில் பயிலும்  மாணவ, மாணவிகள் பலர்  நடந்தே வீட்டுக்கு சென்றனர்.

மேலும், காவனூரிலிருந்து வெள்ளகுளம், புங்கனூர், குப்பம், வெங்கடாபுரம், பாலமதி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் காவனூரில் இருந்து புங்கனூர் வரை  நடந்து சென்று அங்கிருந்து பஸ்கள் மூலமாக தங்களது ஊர்களுக்கு சென்றனர். இதுகுறித்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சேட்டு கூறியதாவது:  வழக்கமாக சாலை பணிகள் நடைபெறும் போது சாலையை இரண்டாக பிரித்து ஒரு பக்கம் பணிகள் நடைபெறும். மற்றொரு பக்கம் வாகனங்கள் சென்று வரும். அப்படி செய்யும் போது யாருக்கும் எந்தவிதமான இடையூறும் ஏற்படாது. ஆனால், அது போன்று செய்யாமல் முழு சாலை பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்றதால் பொதுமக்களும் மாணவர்களும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும், சாலை அமைக்கும்போது யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல்  அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED சர்ச் பாதிரியார் அதிரடி கைது மதமாற்றம் செய்ய முயன்றதாக பெண் புகார்