×

சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் தற்காலிக கடைகள் ஏலம்

கன்னியாகுமரி, நவ.12:  கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் வருகை தரும் சபரிமலை சீசனை முன்னிட்டு தற்காலிக கடைகள் ஏலம் நேற்று 2வது முறையாக நடந்தது.கன்னியாகுமரிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தரும் சபரிமலை சீசன் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தற்காலிக கடைகளுக்கான ஏலம் கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி காலை தொடங்கியது. முதலில் கார் பார்க்கிங் ஏலம் நடைபெற்றது. மணிவண்ணன் என்பவர் ரூ.16 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். கடற்கரை சாலையில் 250 கடைகள், சன்னதி தெருவில் 23 கடைகள் உட்பட மொத்தம் 273 கடைகளுக்கு ஏலம் தொடங்கியது. இதில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போயின. இவை மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 206க்கு ஏலம் போனது. கோர்ட் உத்தரவுபடி கடற்கரை சாலையில் 250 கடைகள் மட்டுமே ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பேரூராட்சி நிர்ணயித்த தொகை அதிகமாக இருந்ததால் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கவில்லை. இதனால் கடைகளின் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 2வது முறையாக நேற்று காலை ஏலம் தொடங்கியது. கோட்டாட்சியர் மயில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், செயல் அலுவலர் சத்தியதாஸ், தாசில்தார் அப்துல்மன்னா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதுபோல் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகளும் பங்கேற்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
நேற்று கடற்கரை சாலையில் மொத்தம் 246 கடைகள், சன்னதி தெருவில் 23 கடைகள் என மொத்தம் 269 கடைகளுக்கு ஏலம் நடந்தது. இதில் 62 கடைகள் மட்டுமே ஏலம்போனது. இதில் 20 கடைகள் திபெத் அகதிகள் ஏலம் பிடித்தனர். இந்த ஏலம் மூலம் பேரூராட்சிக்கு 3 லட்சத்து 21 ஆயிரத்து 333 ரூபாய் வருவாய் கிடைத்தது. முதல் நாள் நடந்த ஏலம் உள்பட  இதுவரை பேரூராட்சிக்கு மொத்தம் 50 லட்சத்து 63 ஆயிரத்து 531 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஏலம் போகாத கடைகளுக்கான ஏலம் வரும் 15ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : stores auction ,Kanyakumari ,season ,Sabarimala ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை