உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்காக அதிமுக-அமமுக பிரமுகர்கள் அடிதடி : சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பல்லாவரம்: உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக, பல்லாவரத்தில் அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரம், ஆல்பர்ட் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (42). அதிமுக பிரமுகரான இவர், அதே பகுதியில் 1வது வார்டு முன்னாள் அதிமுக வட்டச் செயலாளராகவும் இருந்து வந்தார். இளங்கோவனின் சகோதரர் சிங்காரம் (45). இவர், அமமுக கட்சியின் பல்லாவரம் நகர  செயலாளராக இருந்து வருகிறார்.

தம்பி அதிமுகவிலும், அண்ணன் அமமுகவிலும் இருக்கும் நிலையில், அவர்களுக்கு சொந்தமான அலுவலகம் அதே பகுதியில் உள்ளது. இந்த அலுவலகம் இருவரில் யாருக்கு சொந்தம் என்ற தகராறு நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில்  நேற்று முன்தினம் மதியம் சிங்காரம் இந்த அலுவலகத்திற்கு சென்று, ‘‘இனிமேல் இந்த அலுவலகம் எனக்குதான் சொந்தம், அதனால் மரியாதையாக ஓடி விடு’’ என்று கூறி இளங்கோவனை  ஆபாசமாக பேசி தகராறு செய்துள்ளார். மேலும் ‘‘வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு நீ போட்டியிடக் கூடாது. நான்தான் போட்டியிடுவேன்’’ என கூறியுள்ளார்.
Advertising
Advertising

இதன் காரணமாக, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் கைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு சட்டைகள் கிழிந்தன. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர். பின்னர் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சகோதரர்களான இளங்கோவன் மற்றும் சிங்காரம் ஆகிய  இருவருக்கும் இடையே கட்சி ரீதியாகவும், அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாகவும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் கவுன்சிலர் பதவிக்கு இளங்கோவன் போட்டியிடக்கூடாது என்று சிங்காரம் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த இளங்கோவன், கண்டிப்பாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று கூறியதால், ஆத்திரமடைந்த சிங்காரம்,  இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது தெரிய வந்தது. இதற்கிடையே, அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்கள் இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கும் முன்னரே கவுன்சிலர் பதவிக்காக அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: