×

அதிகாரியின் அதிகார பேச்சை கண்டித்து தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

பழநி, நவ. 8: அதிகாரியின் அதிகார பேச்சை கண்டித்து பழநி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழநி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான குறைகள் மற்றும் உதவித்தொகை தொடர்பாக தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் மனு அளித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. குறிப்பாக உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பலருக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று பழநி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரிடம் மாற்றுத்திறனாளிகள் கேட்டுள்ளனர். அப்போது மீண்டும் மனு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கும், அதிகாரிகளுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சமூக பாதுகாப் திட்ட தாசில்தார் குழிவேல் மாற்றுத்திறனாளிகளை ஒருமையில் பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறி தாலுகா அலுவலக வளாகத்தின் முன்பு மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் பழனிச்சாமி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கலைந்து போக மறுத்து விட்டனர். இதனைத்தொடர்ந்து சப்கலெக்டர் உமா சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அவதூறாக பேசியிருந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதனைத தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் பழநி தாலுகா அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : taluk office ,speech ,
× RELATED துணை வட்டாட்சியர் உட்பட மூவருக்கு...