தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண் கைது: 20 லட்சம் நகைகள் பறிமுதல்

சென்னை: தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் தினமும் 120க்கும் மேற்ப்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதாலும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்ல வேண்டிய இடங்களுக்கு  விரைந்து செல்ல முடியும் என்பதாலும் பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் பாதுகாப்பிற்காக ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப் போலீசார் தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின்  நகை மற்றும் பணத்தை திருடுபோவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் வானுவம்பேட்டை பகுதியை சேர்ந்த தேவி  (43) என்பவர், பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஏறி மாம்பலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அந்த ரயிலில் வந்த மற்றொரு பெண், தேவியின் பையில் இருந்த மணிபர்சை எடுத்துள்ளார்.

Advertising
Advertising

அப்போது, அருகில் இருந்த மற்றொரு பெண் இதுகுறித்து தேவியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பர்சை எடுக்க முயற்சித்த பெண் நான் எதையும் எடுக்கவில்லை எனக்கு எதுவும் என்று கூறியுள்ளார். அதற்குள் ரயில் மாம்பலம் ரயில்  நிலையத்திற்கு வந்ததும், மணிபர்சை திருட முயன்ற பெண், அருகில் இருந்தவர்களை கீழே தள்ளிவிட்டு ரயிலை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இதை பார்த்த சக பயணிகள் அந்த பெண்ணை விரட்டி பிடித்து மாம்பலம் ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பெண் சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (30) என்பதும், இவர் ஈஞ்சம்பாக்கம்  பகுதியில் தங்கியிருந்து கடந்த 2 வருடங்களாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரயில்களில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து   போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ₹20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

செல்போன் திருடர்கள் சிக்கினர்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின்  முரணாக பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், ஆவடி பகுதியை சேர்ந்த குமார் (38) என்பதும், இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் செல்போன்களை திருடி, அதை விற்று,  அதில் கிடைக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 விலையுர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இதேப்போல், மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருடிய புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (எ) குடுவை (24). என்பரையும் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5  செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: