திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் பழுது அடைந்த அரசு வாகனம் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் பழுதடைந்த அரசு வாகனம் சாலையை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு அந்த இடம் குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.  

திருவொற்றியூர், பூந்தோட்ட தெருவில் ஒருங்கிணைந்த சத்துணவு அலுவலகம், சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி மற்றும் ஆரம்பப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்நிலையில் இங்குள்ள சாலையோரம் ஒருங்கிணைந்த சத்துணவு பிரிவு அலுவலகத்துக்கு சொந்தமான பழுதடைந்து பயன்படுத்தாத ஜீப் ஒன்று பல ஆண்டுகளாக கிடக்கிறது. இரவு நேரங்களில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இந்த ஜீப்பில் அமர்ந்து கொண்டு மது அருந்துகின்றனர். இதனால் இந்த வழியாக பெண்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

மேலும், பல ஆண்டுகளாக சாலையோரத்தில் இந்த ஜீப் நிறுத்தப்பட்டு இருப்பதால் அந்த ஜீப்பை சுற்றி குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் இந்த ஜீப்பை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும்  சத்துணவு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இனியாவது உடனடியாக இந்த ஜீப்பை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: