கத்திவாக்கம் வள்ளுவர் நகரில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட கத்திவாக்கம் வள்ளுவர் நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் துணி துவைப்பது, குளிப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற அன்றாடம் பயன்படுத்தக்கூடிய நீரை அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் மழைநீர் கால்வாயை சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் கால்வாய் சேறும் சகதியுமாக உள்ளது.  

Advertising
Advertising

எனவே இந்த மழைநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கடந்த மாதம் இங்குள்ள கால்வாய்கள் மூடி உடைக்கப்பட்டு தூர்வாரும் பணி துவக்கப்பட்டது. ஆனால் அந்த பணியை முழுமையாக முடிக்காமல் அப்படியே கிடப்பில் விட்டுவிட்டனர். இதனால் தெருக்களில் திறந்து கிடக்கும் மழைநீர் கால்வாயில் சிறுவர்களும், முதியவர்களும் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் பல இடங்களில் கால்வாய்கள் முறையாக கட்டப்படாமல் திறந்தே கிடப்பதால் அதன் மீது சிறுவர்களும், பொதுமக்களும் ஆபத்தான நிலையில் செல்கிறார்கள். எனவே உடனடியாக அங்குள்ள கால்வாய்களில் தூர்வாரி சீரமைத்து  அதன் மீது மூடி போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: