தென்பெண்ணை ஆற்று நீரை ஏரிகளுக்கு திருப்பிவிட நடவடிக்கை

கிருஷ்ணகிரி, அக்.31: தென்பெண்ணை ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 808 அடியாகவும், நேற்று காலை 968 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், 41.66 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 968 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆழியாளம், எண்ணேகொல்புதூர் உட்பட 11 தடுப்பணைகளை கடந்து கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து நேற்று 737 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 42.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுறக்கால்வாய் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் 642 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு வரும் நீரின் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது பெய்து வரும் கனமழையிலும் ஏரிகளுக்கு நீர் வரத்து முழுமையாக வரவில்லை. இந்த மழை பயிர்கள் மட்டும் போதுமானதாக உள்ளது. ஏரிகளில் தண்ணீர் நிரம்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே, அணையில் தேக்கி வைக்க முடியாமல் வீணாக தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை, ஏரிகளுக்கு திருப்பிவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: