×

முத்துகிருஷ்ணாபுரத்தில் பாழடைந்த விஏஓ அலுவலக கட்டிடம் இடிப்பு

கடையநல்லூர், அக். 23:  கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் மிட்டாஆபிஸ் தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக கட்டிடம் பழுதடைந்ததையடுத்து கட்டிடத்தை இடிக்காமல் அதனருகிலேயே கீழ்புறம் முத்துகிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலக கட்டிடமும், மேல்புறம் வைரவன்குளம் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடமும் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 2 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கும் சொக்கம்பட்டி, குமந்தாபுரம், முத்துசாமிபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பொதுமக்கள் ஏராளமானோர் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்த பழுதடைந்துள்ள கட்டிடம், இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

பொங்கல் பண்டிகை நேரங்களில் இப்பகுதி பொதுமக்களுக்கு வழங்க கூடிய வேட்டி, சேலைகளை வைப்பதற்கு கூட இடம் இல்லாமல் வேறு ஏதாவது தனியார் இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கொண்டு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பாழடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுத்தால் அங்கு இலவச பொருட்களை வைப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தினகரன் ‘மக்களின் பார்வையில்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.  இதைத் தொடர்ந்து தாசில்தார் அழகப்பராஜா உத்தரவின்படி கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் முன்னிலையில் பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய விஏஓ அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.

Tags : Demolition ,office building ,VAO ,
× RELATED கொரோனாவுக்கு விஏஓ மரணம்