பிளஸ் 2 மாணவி உடல் எரிப்பு விவகாரம் விஏஓ புகாரில் பெற்றோரிடம் விசாரணை

சேலம், அக்.18: சேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட பிளஸ்2 மாணவியின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் எரித்த விவகாரம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ்2 படித்து வந்த ஒரு மாணவி, கடந்த 15ம் தேதி காலை பள்ளிக்கு வந்ததும் அதே வகுப்பில் படித்து வரும் தோழிகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது, அவர்கள் கையில் பீர் பாட்டில் வைத்திருந்ததாக வகுப்பறைக்கு வந்த ஆசிரியர், தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்னர். அவர்கள் முன்பு, மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற மாணவி ஒருவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், போலீசுக்கு தெரிவிக்காமல், அவரது உடலை இரவோடு இரவாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிறந்தநாள் பார்ட்டியின்போது, மாணவிகள் கையில் வைத்திருந்தது பேக்கரி கடையில் விற்பனை செய்யக்கூடிய பழச்சாறு (நான் ஆல்கஹால்) என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்தும், போலீசுக்கு தெரிவிக்காமல் அவரது உடலை எரித்தது குறித்தும், கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன், நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார், போலீசுக்கு உரிய முறையில் தெரிவிக்காமல் சடலத்தை எரித்தது ஏன் என்பது குறித்து, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், சடலத்தை எரித்து விட்ட காரணத்தால், இப்புகார் குறித்து மேட்டூர் மாஜிஸ்திரேட் அனுமதியை பெற்று, மேல் நடவடிக்கை எடுக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: