×

உணவு பொருட்களில் கலப்படம் அனைவரும் விழிப்புணர்வு தேவை

திருப்பூர், அக். 17: உலக உணவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் சார்பில் உலக உணவு தினவிழா திருப்பூர் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளி ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளி கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்து பேசியதாவது: இன்று (நேற்று) உலக உணவு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி திருப்பூர் மாவட்டத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். அந்த வகையில் கிடைக்கும் உணவு சரிவிகிதத்திலும், சத்தானதாகவும் அமைய வேண்டும். நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள் நம்மை யார் என்று அடையாளம் காட்டுகிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்வதுடன், நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள், கீரைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

மேலும் துரித உணவுகளை தவிர்த்து, பாரம்பரியமான இயற்கை உணவு முறைகளை சாப்பிட வேண்டும். உணவை வீணாக்காமல், மீதமாகும் உணவுகளை உணவு கிடைக்காதவர்களுக்கு வழங்க வேண்டும். உணவு பொருட்களில் கலப்படம் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாலித்தீன் கவரில் உணவு பொருட்கள் பொட்டலமிடப்படுவதால் உடலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் சத்தான உணவு பொருட்களை உண்ண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னதாக நாம் தினமும் பயன்படுத்தும் டீத்துள், பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களில் செய்யப்படும் கலப்படம் குறித்தும், காலாவதியான உணவு பொருட்களை கண்டுபிடிப்பது குறித்தும் மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாணவ-மாணவிகள் தாங்களே தயார் செய்து கொண்டு வந்திருந்த பாரம்பரிய உணவு பொருட்கள் கண்காட்சியாக வைத்திருந்தனர். முடிவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தங்கவேல், மணி, கேசவராஜ், ராமச்சந்திரன், சதீஸ்குமார், ஏ.வி.பி. அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் மெட்ரிக் பள்ளி முதல்வர் தனலட்சுமி, வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் துணை பொது செயலாளர் சிந்து சுப்ரமணியன் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்