கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் சாலையோரத்தில் ராட்சத பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பூர்: கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் சாலையோரத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர்  இரண்டாவது பிளாக் 6வது பிரதான சாலையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஒருவழியாக அந்த இடத்தில் அதிகாரிகள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்து அதை சரி செய்ய ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து கண்ணதாசன் நகர்  2வது பிளாக் ஒண்ணாவது தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ராட்சத பள்ளங்கள் தோண்டி பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. இதில் 4வது பிளாக் 1வது தெருவில் தோண்டப்பட்ட பெரிய பள்ளம் இதுவரை மூடப்படவில்லை இதனால் அப்பகுதியில்  பெரிய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Advertising
Advertising

மேலும் அவ்வழியாக செல்லும் ஆட்டோக்கள் முதல் இருசக்கர வாகனங்களை  வரை ஒருவித அச்ச உணர்வுடனேயே பள்ளத்தை கடந்து செல்கின்றனர். மேலும் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் மர்மக்காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. இந்த பள்ளங்கள் தற்போது குண்டும் குழியுமாக மாறி அந்த பகுதியில் சாலைகளே இல்லாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் தினந்தோறும் அந்த  வழியாக செல்லும் பொதுமக்கள் 2வது பிளாக், 3வது பிளாக் வழியாக செல்லாமல் வேறு வழியாக சிரமப்பட்டு செல்கின்றனர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது அப்பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இன்றுவரை அந்த பகுதியில் குடிநீர் வராமல் லாரியில் வரும் குடிநீரை  நம்பி  அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே ஆமைவேகத்தில் நடைபெறும் இந்த பணியை உடனடியாக சரி செய்து தருமாறு அப்பகுதியில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் சரமாரியாக   குற்றம்சாட்டுகின்றனர். மழை தொடங்குவதற்கு முன்பு உடனடியாக தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்து தற்காலிக சாலையாவது  அப்பகுதியில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: