புழல் சிறையில் 3 மணி நேரம் அதிரடி சோதனை செல்போன், போதை பொருட்கள் சிக்காததால் போலீசார் ஏமாற்றம்

சென்னை: புழல் சிறையில் நேற்று 3 மணி நேரம் போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. சோதனை பற்றி முன்கூட்டியே பிரபல ரவுடிகள், உடந்தையாக இருக்கும் காவலர்களுக்கு தகவல் லீக் ஆனதால் முதன்முறையாக எந்த பொருட்களையும் பறிமுதல் செய்ய முடியாமல் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் மகளிர், தண்டனை, விசாரணை என்ற 3 பிரிவு சிறைகள் உள்ளன. இதில் சுமார் 150 பெண்கள் உள்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு தண்டனை மற்றும் விசாரணை சிறை பிரிவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் மற்றும் செல்போன், சார்ஜர் மற்றும் பேட்டரி நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து மாதவரம் போலீஸ் துணை கமிஷனர் ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் மாதவரம், புழல் உதவி கமிஷனர்கள், 8 இன்ஸ்பெக்டர்கள், 29 எஸ்ஐக்கள் உட்பட மொத்தம் 60 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை புழல் சிறையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கஞ்சா, செல்போன் உள்ளிட்ட எந்த பொருட்களும் கிடைக்காததால் போலீஸ் குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “புழல் சிறையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை அதிரடி சோதனை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் புழல் சிறையில் இன்று (நேற்று) காலை போலீசார் அதிரடி சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே சிறைக்குள் இருக்கும் பிரபல கைதிகளுக்கும், உடந்தையாக இருக்கும் காவலர்களுக்கும் ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதில் உஷாராகி செல்போன், கஞ்சா உள்ளிட்டவற்றை மறைத்துவிட்டனர். இதனால் இச்சோதனையில் முதன்முறையாக செல்போன் உள்ளிட்ட எவ்வித பொருட்களையும் பறிமுதல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று” என்றனர்.தண்டனை மற்றும் விசாரணை சிறை பிரிவில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் செல்போன், சார்ஜர் மற்றும் பேட்டரி நடமாட்டம்  அதிகமாக உள்ளது.

Related Stories: