×

உயர்நிலை, மேல்நிலையில் நடத்தப்படுவது போன்று 3,4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு

நாகர்கோவில், அக்.15:  தொடக்க பள்ளிகளில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் 2019-20ம் கல்வி ஆண்டு பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாணவ மாணவியரின் உடல் திறனை வளர்க்கும் பொருட்டு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டு திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில், ‘அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 3 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அவர்களின் விளையாட்டு திறனை கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்தி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை ‘சமக்ர சிக்ஷா’ மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தில் இருந்து செலவினம் மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’ என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Elementary Education ,Sports Competition ,
× RELATED அரசுக்கு எதிராக போராட்டத்தில்...