சட்ட கல்லூரி நுழைவாயிலில் மாணவனுக்கு அரிவாள் வெட்டு: சக மாணவனுக்கு போலீஸ் வலை

சென்னை: பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சட்ட கல்லூரியில் 5ம் ஆண்டு படித்து வரும் மாணவன் கார்த்திக் (23). கல்லூரியில் ரவுடி போல் வலம் வந்ததாக கூறப்படுகிறது. வேறு ஒரு கல்லூரியில்  படித்துவிட்டு, தற்போது  5ம் ஆண்டு சட்டம் படிப்பதற்காக   அஸ்வின் (24) என்ற  மாணவன் சமீபத்தில் இந்த கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும், என அஸ்வினை, கார்த்திக் மிரட்டியுள்ளார்.  இதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்ததுடன், நான் எதற்கு உனக்கு மரியாதை தர வேண்டும், என்று எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார். இதனால், மாணவர்கள் மத்தியில் தான் அவமானம் அடைந்ததாக கருதிய கார்த்திக், அஸ்வினை பழி வாங்க  சமயம் பார்த்து காத்திருந்தார்.  

நேற்று மாலை  கல்லூரிக்கு  வெளியே காரில் தயாராக பெரிய கத்தியுடன்  காத்திருந்த கார்த்திக், அஸ்வின் வெளியே வந்ததும் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த அஸ்வினை மீட்ட சக மாணவர்கள் சென்னை  கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியே  போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனிடையே கார்த்திக், அஸ்வினை கல்லூரி நுழைவாயிலில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டும் சிசிடிவி கேமரா காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீசார், கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Related Stories: