×

நுண்துளை சிகிச்சை மூலம் 9 மாத குழந்தைக்கு சிறுநீரக கல் அகற்றம்

சேலம், அக்.10: நுண்துளை சிகிச்சை மூலம், 9 மாத குழந்தைக்கு சிறுநீரக கல்லை அகற்றி, காவேரி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. மக்களை மிக அதிகமாக பாதிக்கும் நோய்களில் சிறுநீரக கல் தொந்தரவும் ஒன்று. ஆனால் குழந்தைகளுக்கு இந்த பிரச்னை வருவது மிகவும் அரிது. மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரகக் கற்களை அறுவை சிகி்ச்சை மூலம் அகற்றுவது மிகவும் சவாலான விஷயம். கடந்த வாரம், 9 மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையை, சிறுநீரில் ஏற்பட்ட ரத்த கசிவுக்கு சிகிச்சை பெற, பெற்றோர் சேலம் காவேரி மருத்துவமனையை அணுகினர். குழந்தையை சிடி ஸ்கேன் பரிசோதனை செய்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் விவேகானந்தன், குழந்தையின் வலது சிறுநீரகத்தில் 12 மிமீ அளவுடைய கல் இருப்பதை கண்டுபிடித்தார். இதை சரி செய்ய, குழந்தையின் சிறுநீரகத்தில், வெறும் 5 மிமீ துளையிட்டு, அதன் வழியாக லேசர் கதிர் மூலம் கல்லை உடைத்து, முழுவதுமாக நீக்கினார். 2 நாட்கள் மட்டுமே குழந்தை மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தது. இவ்வளவு சிறிய வயதுடைய குழந்தைக்கு, நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல்லை அகற்றுவது அரிதிலும் அரிது மற்றும் மிகவும் சவாலானது என்று டாக்டர் விவேகானந்தன் தெரிவித்தார்.

Tags : infant ,
× RELATED ‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கையில் பிறந்த...