×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி நிறைவு விழா

திருவண்ணாமலை, அக்.9: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற நவராத்திரி விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற நவராத்திரி விழா, கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்களும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதன்படி, முதல் நாளான்று பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர். கடந்த 30ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 1ம் தேதி கெஜலட்சுமி அலங்காரத்திலும், 2ம் தேதி மனோன்மணி அலங்காரத்திலும், 3ம் தேதி ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர்.

மேலும், 4ம் தேதி ஆண்டாள் அலங்காரத்திலும், 5ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும், 6ம் தேதி லிங்கபூஜை அலங்காரத்திலும், 7ம் தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவின் நிறைவாக, விஜயதசமி தினமான நேற்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Navratri Complete Ceremony ,Annamalaiyar Temple ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 40 பேருக்கு கொரோனா