திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் 3 மாதத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல்: மாநகராட்சி திட்டம்

சென்னை: திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக 3 மாதத்திற்கு ஒருமுறை குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 5000 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையை கிடங்குகளுக்கு மறு சுழற்சி முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. அதன்படி 1,412 இடங்களில் 3,342 மையங்கள் மூலம் மக்கும் குப்பை மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. தினசரி சேகரிக்கப்படும் 5000 டன் குப்பையில் 2000 டன் குப்பையை கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் சேகரிக்கும் இடத்திலேயே மறுசுழற்சி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் பொதுமக்களுக்கு உள்ள குறைகளை தீர்க்கும் விதமாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் அடையாறு மண்டலத்தில் உள்ள குடியிருப்போர் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்த  இந்த கூட்டத்தில் துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன் ரெட்டி, தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், திடக்கழிவு மேலாண்மை துறை தலைமை பொறியாளர் மகேசன் மற்றும் 33 நல சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், குப்பையை பொதுமக்கள் தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்குவது, முறையாக துப்புரவு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை கேட்கப்பட்டது. இதுகுறித்து, குடியிருப்போர் நல்சங்கங்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தன. அவற்றை பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து, இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டம் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற ஆணையர் பிரகாஷ், 3 மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற கலந்துரையாடல் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்தார்.

Related Stories: