வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் ஆமை வேகத்தில் சாலை அமைக்கும் பணி

வாலாஜாபாத், செப்.26: வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் ஊராட்சியில் நடைபெறும் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் இருந்து வாரணவாசி செல்லும் சாலையை இணைக்கும் இச்சாலை, சுமார் 2 கிமீ தூரம் உள்ளது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்ச்சாலையில், தற்போது ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதைதொடர்ந்து, கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்த சாலையை புதுப்பிக்கும் பணி துவங்கியது. ஆனால், பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், இதுவரை முழுமைய அடையவில்லை. இதனால் ஜல்லிகள் சாலை முழுவதும் கலைக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதையொட்டி, கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அகரம் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் அகரம் ஊராட்சி 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். இங்குள்ள சுடுகாடு சாலை வழியாக அகரம், தென்னேரி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வருகிறோம். மேலும், வாரணவாசி செல்லும் கிராம மக்களும் இந்த சாலை பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் தொழிற்சாலைகளில் இருந்து பணி முடித்து வீடு திரும்புபவர்களும், இச்சாலை வழியாக பைக்கில் வரும்போது கடும் அவதியடைகின்றனர். அதே வழியில் நடந்து செல்பவர்களும் சிரமம் அடைகின்றனர். இந்த தார்சாலை பணி கடந்த 5 மாதங்களுக்கு துவங்கியது. ஆனால், இதுவரை ஆமை வேகத்தில் நடக்கிறது. பணியை எடுத்துள்ள ஒப்பந்ததாரர் ஆளுங்கட்சியை சேர்ந்த மாவட்ட பொறுப்பிலுள்ள ஒருவரின் நெருங்கிய உறவினர். இதனால், அதிகாரிகள் அவரை விரைந்து பணியை முடிக்க வலியுறுத்துவதும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், மேற்கண்ட பகுதியில் நடக்கும் சாலை இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில், வேறு ஒரு ஒப்பந்ததாரரிடம் பணியை ஒப்படைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: