×

40 லட்சம் வாடகை பாக்கி அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 8.5 கோடி மதிப்பு சொத்துக்கள் மீட்பு: அறநிலையத்துறை நடவடிக்கை

சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் புகழ்பெற்ற அகத்தீஸ்வரர் கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெரு, ரெட்டி தெரு உள்ளிட்ட பல்ேவறு தெருக்களில் உள்ளன. இந்த இடங்களில் 100க்கும் மேற்பட்ட வீடு, கடைகள் உள்ளன. இந்த வீடு மற்றும் கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் சிலர், பல ஆண்டுகளாக அறநிலையத்துறைக்கு வாடகை செலுத்தவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், சம்மந்தப்பட்டவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனிடையே, வாடகைதாரர்கள் சார்பில், இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த இணை ஆணையர் ஹரிப்பிரியா, வாடகை கட்டாதவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற கோயில் அலுவலர் ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் வில்லிவாக்கம் எம்பார் நாயுடு தெருவில் கண்ணம்மாள் என்பவர் 2580 சதுர அடியில் வீடு, கடைகளுக்கு கடந்த 30.6.2016 வரை ₹7 லட்சத்து 95 ஆயிரத்து 136 வாடகை செலுத்தவில்லை. அதேபோன்று ரெட்டி தெருவில் பாலகுமார் கடந்த 2016 வரை 23 லட்சத்து 36 ஆயிரத்து 377 வாடகை பாக்கி வைத்துள்ளார். இந்த இரண்டு பேரும் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தாததால், கோயில் செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ், வருவாய்த்துறை ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் போலீசார் உதவியுடன் இரண்டு வீடு மற்றும் கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.

இதில், எம்பார் நாயுடு தெருவில் உள்ள சொத்து மதிப்பு 1.50 கோடி மற்றும் ரெட்டி தெருவில் உள்ள சொத்து மதிப்பு 7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட கோயிலுக்கு சொந்தமான வீடுகளில் வாடகை இருப்போர் பலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. அதன்பிறகு பாக்கி வைத்துள்ள வீடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கோயில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Tags : Recovery ,Pakistani Agateeswarar Temple ,
× RELATED அரியவகை கூகை ஆந்தைகள் மீட்பு