×

4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர தரைமட்டத்திற்கு சென்று ஆதரித்தேன்: வாய் திறக்கிறார் ஓபிஎஸ்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மற்றும் பாஜ கூட்டணி கட்சியினர் தொகுதி அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘எனது வேட்புமனுவில் குழப்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி குரூப், என்னை போன்று ‘ஓ’ என தொடங்கும் விலாசம் கொண்ட 5 பன்னீர்செல்வத்தை கள்ளத்தனமாக, குறுகிய நோக்கத்தோடு இறக்கி உள்ளார்.

நான் விரும்பி கேட்ட சின்னங்களான வாளி, திராட்சை, பலா ஆகியவற்றை அவர்களும் கேட்டனர். ஆனால் முக்கனியில் ஒன்றான பலாப்பழத்தை இயற்கையாகவே இறைவன் தந்து விட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் படிவத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்க நான் கையெழுத்திட்டேன். ஆனால் இன்று எனது நிலைமை சுயேச்சையாக நிற்கிறேன்.

எடப்பாடியின் 4 ஆண்டு ஆட்சி தொடர தரை மட்டத்திற்கு சென்று ஆதரித்தேன். எனது கையெழுத்தை பார்த்தவுடன் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும், நிதிகளையும் தந்தது. கடந்த தேர்தலின் போது அதிமுகவில் ஒரே ஒரு எம்பி தொகுதியில் வெற்றி பெற்ற எனது மகனுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் பதவி வழங்க முன் வந்தார். ஆனால் எடப்பாடி அதையும் தடுத்து நிறுத்தி விட்டார்’ என்றார்.

* ஓபிஎஸ் காரில் அதிமுக வண்ணம்
அதிமுக கொடி, சின்னம், கட்சி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஓபிஎஸ் தனது காரின் முன்பகுதியிலுள்ள கொடி கம்பத்தில் அதிமுக கொடியின் வண்ணத்தின் கவர் பொருத்திய காரில் வந்தார்.

* ஓட்டுக்கு ரூ.2000 லஞ்சம்: ஓபிஎஸ் மீது வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அறந்தாங்கி- பேராவூரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு வந்த வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று திருமண மண்டப வாசலில் 4 பெண்கள் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர்களுக்கு ஓபிஎஸ் ரூ.2000 வழங்கினார். கூட்டத்துக்கு அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் ஓபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர தரைமட்டத்திற்கு சென்று ஆதரித்தேன்: வாய் திறக்கிறார் ஓபிஎஸ் appeared first on Dinakaran.

Tags : Palaniswami ,AIADMK Activists Rights Recovery Committee ,BJP ,Mudukulathur ,Ramanathapuram ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Edappadi Palaniswami Group ,OPS ,Dinakaran ,
× RELATED வெற்றியை இலக்காக கொண்டு தேர்தல்...