×

ஆற்காடு அருகே பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ஆற்காடு, செப்.20: ஆற்காடு அருகே நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், ஆற்காடு தாஜ்புரா பகுதியில் சாலையோரம் உமாசங்கர் என்பவரது வீட்டுமனை உள்ளது. இதன் எதிரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஓட்டல் மற்றும் கடைகள் நடத்தப்பட்டு வருகிறதாம். இந்த ஆக்கிரமிப்பால் தனது வீட்டுமனைக்கு செல்ல இடையூறாக உள்ளதாக உமாசங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆற்காடு தாசில்தார் வத்சலா தலைமையில் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சாய் சத்தியநாதன், உதவிப்பொறியாளர் ஞானப்பிரகாசம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியுடன் அங்கு வந்தனர்.

தொடர்ந்து, ஆற்காடு தாலுகா இன்ஸ்பெக்டர் பாலு தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். அப்போது, அங்கு அகற்றப்பட்ட கடையின் உரிமையாளரின் சகோதரர் ரவி(38) ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக்கண்ட போலீசார் விரைந்து சென்று அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். பின்னர், ரவி மீது தண்ணீர் ஊற்றினர். அப்போது ரவி, ‘ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாகுபாடு காட்டுவதா?’ என ஆவேசமாக கேட்டார். உடனே அவரை அங்கிருந்து போலீசார் அகற்றினர். ெதாடர்ந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி லாரியில் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Arcot ,
× RELATED மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்