×

வங்கிகள் இணைப்பை கண்டித்து நாடாளுமன்றம் முன்பு 20ம் தேதி போராட்டம்

சேலம், செப்.15: வங்கிகள் இணைப்பை கண்டித்து, நாடாளுமன்றம் முன்பு வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்தார்.தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில், 23வது மாநில மாநாடு சேலத்தில் 2 நாட்கள் நடக்கிறது. நேற்று தொடங்கிய மாநாட்டில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தும் வசதி இருந்தும், திருப்பி செலுத்தப்படாமல் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய், கடன் தொகையை இதுவரை திருப்பி செலுத்தவில்லை.

அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி பணியில் நாடு முழுவதும் 2 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களும், வங்கிகள் மூலமாகவே செயல்படுத்தப்படுவதால் வங்கி பணியில் அதிகளவில் இளைஞர்களை பணியமர்த்த வேண்டும். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில், 10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பது நிரந்தர தீர்வு ஆகாது. இதன் மூலம் 1500 வங்கி கிளைகள் மூடும் நிலைக்கு தள்ளப்படும். வங்கிகள் இணைப்பை கண்டித்து, வரும் 20ம் தேதி நாடாளுமன்றம் முன்பு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வாராக்கடன் சுமைக்காக, சாதாரண வாடிக்கையாளர்கள் மீது சேவை கட்டணம், அபராத கட்டணம் என சுமத்தக்கூடாது. இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.

Tags : parliament ,
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...