×

₹40 ஆயிரம் கோடியில் சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில் வழி மேம்பாட்டு சாலை அமைச்சர்எம்.சி. சம்பத் தகவல்

நாகர்கோவில், செப்.15: சென்னை - கன்னியாகுமரி இடையே₹40 ஆயிரம் கோடியில் தொழில் வழி மேம்பாட்டு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார். நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நேற்று, தொழில் முனைவோர் உருவாக்குவதற்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம்  நடைபெற்றது. கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாமை, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 570 நபர்களுக்கு, ₹270 கோடி வரையிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. ஆண்டுக்கு 5 லட்சம் மாணவர்கள் கல்வியை முடித்து வெளியே வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலான திட்டங்களை ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சென்னை - கன்னியாகுமரி இடையே தொழில் வழி மேம்பாட்டு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தொழில் வழி மேம்பாட்டு சாலையில் பல்வேறு ெதாழில் நகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். உற்பத்தி பொருட்கள் சரியான நேரத்தில் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அதை கணக்கில் கொண்டு தான் இந்த தொழில் வழி மேம்பாட்டு சாலை அமைக்கப்படும். இதற்கான முதலீடுகள் ₹40 ஆயிரம் கோடி வரை ஆகும் என கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் உதவியுடன் இது அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் நடக்கின்றன. அந்த வகையில் குமரி மாவட்டத்தையும் தொழில் துறையில் முன்னேறிய மாவட்டமாக மாற்ற முடியும்.

கல்லூரியில் கல்வியை மட்டும் கற்றுக் கொள்ளாமல், திறன் மேம்படுத்துதலிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். தனிப்பட்ட கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் தான் முக்கியம். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்கிறது. தொழில் மேம்பாட்டு கழகத்தின் மூலம் கூட மாணவர்கள் கடன் பெற முடியும். எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நேரத்தில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், குமரி மாவட்ட பால் வள தலைவர் அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு சங்க தலைவர் ஜாண் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் வரவேற்றார். ஆடிட்டர்கள், பல்வேறு துறை வல்லுனர்கள் மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளித்து பேசினர். பொருளாதார வீழ்ச்சி சர்வதேச பிரச்னை முன்னதாக தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் தொழில் துறை அதிக வளர்ச்சி பெற்று வருகிறது. பொருளாதார வீழ்ச்சி என்பது உள் நாட்டு பிரச்னை இல்லை. அது சர்வதேச பிரச்னை. இந்த ஆண்டு தொழில் வளர்ச்சி குறித்து உலக முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

 இதில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் வந்துள்ளது. ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடு பெற்று உள்ளோம். மேலும் வளர்ச்சியை ஊக்குவிக்க முதலமைச்சர் வெளிநாடு பயணம் மேற்கொண்டார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.8 ஆயிரத்து 835 கோடி வந்துள்ளது. 41 முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். இது வரலாற்று சாதனை ஆகும். முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொழில் துறையில் தமிழகத்தை முன்னேற்றி உள்ளது. தொழில் வளர்ச்சி குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படுகிறது. ேமலும் தினந்தோறும் வளர்ச்சி குறித்து ஆராயப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்கள் 20 நாட்களில் தொடங்கும் வகையில் ஆன் லைன் மூலம் விண்ணப்பம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...