×

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக ரூ.8,000 அபேஸ் கல்லூரி மாணவர் கைது

போடி, செப்.11: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள விசுவாசபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்(58). காய்கறி வியாபாரி. இவர் கடந்த 5ம் தேதி தனது மனைவி மாரியம்மாளின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றார்.அருகிலிருந்த ஒருவரிடம் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுத்து தரும்படி வேல்முருகன் தெரிவித்தார். வேல்முருகனிடமிருந்து ஏடிஎம் கார்டை பெற்ற வாலிபர், மெஷினில் இருந்து பணம் வரவில்லை எனக் கூறி கார்டை அவரிடம் திருப்பி கொடுத்து விட்டார். இதனையடுத்து வேறு எடிஎம் மையத்தில் பணம் எடுக்க வேல்முருகன் சென்றார். அங்கு அவரது வங்கி கணக்கில் இருந்து சிறிது நேரத்திற்கு முன்பு ஏடிஎம் கார்டு மூலம் ரூ.8 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேல்முருகன், இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை போடி கட்டபொம்மன் சிலை அருகே அந்த மோசடி நபர் நின்று கொண்டிருப்பதை வேல்முருகன் பார்த்தார். பின்னர் அவரை பிடித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில், பிடிபட்டவர் போடி புதூரை சேர்ந்த 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போலீசார், அந்த மாணவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : college student ,ATM ,
× RELATED கிருஷ்ணகிரியை அடுத்த...