லிப்ட் கேட்பது போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் நகை, பணம் பறிப்பு : தாய், மகன் உள்பட 3 பேர் கைது

சென்னை: லிப்ட் கேட்பதுபோல்  தனியாக வரும் வாகன ஓட்டிகளை வழிமறித்து, கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் பறித்த தாய், மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்னேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கடந்த மாத இறுதியில் பொன்னேரி பஜார் அருகே பைக்கில் வந்த பொதுப்பணித்துறை ஊழியரை 3 பேர் வழிமறித்து,   5 சவரன் சங்கிலி மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன், மகளுடன் நடந்து சென்ற மூதாட்டியை தாக்கி, இருவரிடம் இருந்து 8 சவரன் நகைகளை ஒரு கும்பல் பறித்து சென்றது. இதுதவிர, பொன்னேரி பகுதியில் பல்வேறு இடங்களில் தனியே நடந்து  செல்பவர்களை மர்ம கும்பல் வழிமறித்து, கத்தியால் தாக்கி கொள்ளையடித்து வந்தது.  இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில், கொள்ளை கும்பலை பிடிக்க பொன்னேரி ஏஎஸ்பி பவன்குமார் ரெட்டி தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் நேற்று முன்தினம் காலை 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிவதை பார்த்தனர். இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், பொன்னேரி அடுத்த சின்னகாவனம் கிராமத்தை சேர்ந்த வசந்த் (21), அவரது நண்பர் மீஞ்சூர், தோட்டக்காடு கிராமத்தை சேர்ந்த விஷ்ணு (21) எனத் தெரியவந்தது.மேலும், பொன்னேரி பகுதியில் வசந்த், தனது தாய் வாணி (45) என்பவருடன் சுற்றி வந்துள்ளான். அப்போது தனியே வரும் வாகன ஓட்டிகளை வாணி மறித்து லிப்ட் கேட்பார்.  இந்த சந்தர்ப்பத்தில் வசந்த்,  நண்பர் விஷ்ணு ஆகிய இருவரும்  வந்து, வாகன ஓட்டியை கத்தியால் வெட்டி,  பணம், செல்போன் மற்றும் தங்க நகைகளை பறித்து வந்ததும் தெரிய வந்தது, இதைத் தொடர்ந்து  வசந்த்தின் தாய் வாணியையும் தனிப்படை போலீசார் பிடித்தனர்.இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர்.

Related Stories: