வைரலாகும் வீடியோ முக்கடல் அணையில் கல்லூரி மாணவர்கள் மீது ரவுடி கும்பல் தாக்குதல் 3 பேர் தலைமறைவு

நாகர்கோவில், ஆக.22 : முக்கடல் அணையில் கல்லூரி மாணவர்களை, ரவுடி கும்பல் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவ, மாணவிகளை இன்டஸ்ட்ரீயல் ஆய்வு என்ற பெயரில், முக்கடல் அணைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள பூங்கா உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகள் பார்த்துக் கொண்டு இருந்தனர். இந்த கல்லூரியில் பயில கூடிய மாணவி ஒருவரை, சக மாணவர் காதலித்துள்ளார். ஆனால் மாணவரின் நடத்தை சரியில்லாததால், மாணவி காதலை துண்டித்துள்ளார். சமீப காலமாக இருவரும் பேசுவது இல்லை. இதனால் மாணவி மீது, அந்த மாணவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். ஆய்வுக்கு சென்ற இடத்தில், அந்த மாணவியை வழி மறித்த மாணவர், மாணவியின் கன்னத்தில் அறைந்தார். இதை பார்த்ததும் சக மாணவர்கள் 2 பேர் வந்து, மாணவியை மீட்டதுடன் அவரை தாக்கிய மாணவரை கண்டித்தனர். இதனால் மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அந்த சமயத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர், தனது செல்போனில் யாருக்கோ போன் செய்தார். சிறிது நேரத்தில் இறச்சக்குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி, ஒருவரின் தலைமையில் 3 பேர் உருட்டுக்கட்டையுடன் பைக்கில் அங்கு வந்தனர். காதல் பிரச்னையில் மாணவியை தாக்கிய மாணவரை அழைத்து பேசிய ரவுடி கும்பல், உன்னை தாக்கியவர்கள் யார்? என அடையாளம் கேட்டு அந்த மாணவர்கள் 2 பேரை உருட்டு கட்டையால் தாக்கி, மிகவும் அருவருப்பாக பேசினர். அதில் இறச்சக்குளத்தை சேர்ந்த அந்த ரவுடி, நான் ஏற்கனவே கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன். நீ வெளியே வந்தும், உன் தலையை துண்டிப்பேன் என கூறி மிரட்டினார். உடனடியாக மற்ற மாணவர்களும், பேராசிரியர்களும் ஓடி வந்து அந்த ரவுடி கும்பலிடம் கெஞ்சி அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர். உடனடியாக ஆய்வை ரத்து செய்து விட்டு அவசர, அவசரமாக அவர்கள் கல்லூரிக்கு திரும்பினர்.

ரவுடி கும்பலை வரவழைத்த அந்த மாணவர் மீது தற்போது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரவுடி கும்பல் மாணவர்களை தாக்கிய வீடியோ, வாட்ஸ் அப் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் கொலை வெறியுடன் உருட்டு கட்டைகளை கையில் வைத்து கொண்டு ரவுடி கும்பல் தாக்கும் காட்சிகள் பதற வைப்பதாக உள்ளன.3 பேர் தலைமறைவு : சம்பவம் நடந்த பகுதி, பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்டு வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக பூதப்பாண்டி போலீசாரிடம் கேட்ட போது, வாட்ஸ் அப்பில் வரும் வீடியோவை வைத்து நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது. பாதிக்கப்பட்ட மாணவர் அல்லது சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நேரடியாக வந்து புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

இதற்கிடையே வாட்ஸ் அப்பில் தாக்குதல் வீடியோ வெளியானதில் இருந்து அந்த ரவுடி மற்றும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது ெசய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி சார்பில் போலீசில் புகார்இது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது: முக்கடல் அணை பகுதியில் உள்ள பூங்காவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தாக்குதல் சம்பவம் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணை பூங்காவில் நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் முக்கடல் அணை பூங்காவில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாணவர்கள் மீது தாக்குதல் குறித்து வீடியோ காட்சி ஆதாரங்கள் மூலம் காவல் துறையில் புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.Tags :
× RELATED நாகர்கோவிலில் மின் கம்பங்கள் மீது மோதி கடைக்குள் புகுந்த சரக்கு லாரி