கொல்லங்கோடு அருகே சொகுசு காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

நித்திரவிளை, ஆக. 22: கொல்லங்கோடு   காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள்   மற்றும் போலீசார் நேற்று  முன்தினம் இரவு  வெங்குளம்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவ்வழியே  சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு சொகுசு கார் வந்தது.   அதை சைகை காட்டி  நிறுத்தியபோது கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து  போலீசார்  வாகனத்தை  துரத்தி சென்றனர்.

இதைக்கண்ட டிரைவர்  மஞ்சத்தோப்பு பகுதியில் காரை  நிறுத்திவிட்டு தப்பி சென்றார். போலீசார்  வாகனத்தை சோதனை செய்தபோது அதில்  50 கிலோ எடையுள்ள 20 மூட்டை ரேஷன் அரிசி  இருந்தது கண்டறியப்பட்டது.  பிடிபட்ட சொகுசு கார் மற்றும் ரேஷன் அரிசியை  புட் செல் போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.தொடர்ந்து போலீசார் நடத்திய  விசாரணையில் கடத்தி  வரப்பட்ட ரேஷன் அரிசி பூத்துறை பகுதியில் உள்ள ஒரு  பெண் வியாபாரியின்  வீட்டில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்ல வந்ததாக  தெரியவந்தது. மேலும்  இந்த பெண் வியாபாரியின் வீட்டில் நித்திரவிளை போலீசார் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி   வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து புட் செல்   போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED தாணுலிங்க நாடார் பிறந்தநாள் விழா...