×

வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு சாலை அமைக்கப்படுமா?

வருசநாடு, ஆக.20: வருசநாடு அருகே கனமழையால் குண்டும் குழியுமான முத்துநகர் மலை சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.வருசநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் மலைக்கிராமம் சாலை கனமழையால் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 5 கிலோமீட்டர் நடந்து தும்மக்குண்டு, வாலிப்பாறை செல்லும் அவல நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்வதற்கும் ரேஷன் அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு செல்வதற்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இது சம்பந்தமாக ஏற்கனவே பலமுறை தும்மக்குண்டு கிராமசபை கூட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் இதுவரையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராமமக்கள் எங்களுக்கு விடியல் எப்போது என காத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து கிராமவாசி மாயி கூறுகையில், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சில மாதங்களாக மண்சாலைகள் மிகவும் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகவும் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இதை சரி செய்ய தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு