கந்திகுப்பம் தூய விண்ணரசி அன்னை ஆலய தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி, ஆக.20: பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தூய விண்ணரசி அன்னை ஆலயத்தின் 41ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் துவங்கியது. 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடந்தது. 16 மற்றும் 17ம் தேதிகளில் தியான உரை, திருப்பலி நடந்தது. திருப்பலியை பங்குத்தந்தைகள் தேன்கனிக்கோட்டை மரியஜோசப், சேலம் சமூக சேவை மைய இயக்குநர் ராஜமாணிக்கம், சிப்காட் அருள்ராஜ், ஓசூர் சூசை, மத்திகிரி புனித சவேரியார் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் பெரியநாயகம் ஆகியோர் வழிநடத்தினர். நற்கருணை ஆராதனையை, கந்திகுப்பம் கானா தியான இல்ல இயக்குநர் அற்புதராஜ், தியான உரையை பெங்களூரு கஸ்பார் தியான மைய இயக்குநர் மரியஅந்தோணி ஆகியோர் வழிநடத்தினர்.

நேற்று முன்தினம் (18ம்தேதி) காலை 8 மணிக்கு, தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில், ஆலய நுழைவு வாயில் மந்திரிப்பு, திருவிழா திருப்பலி நடந்தது. இரவு 8 மணிக்கு விண்ணரசி அன்னையின் திருத்தேர் பவனி வாணவேடிக்கையுடன் நடந்தது. இதில், கந்திகுப்பம், ராயப்பனூர், குரும்பர்தெரு, எலத்தகிரி, காத்தாம்பள்ளம், கிருஷ்ணகிரி, புஷ்பகிரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்திகுப்பம் தூய விண்ணரசி அன்னை ஆலய பங்குத்தந்தை மதலைமுத்து தலைமையில் பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள், வேதியர், பங்கு பேரவை பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: