×

வள்ளியூரில் போலீஸ் விசாரணையின் போது மர்மசாவு முன்னாள் பெண் கவுன்சிலர் லீலாபாய் உடல் நாகர்கோவிலில் தகனம்

நாகர்கோவில், ஆக.20:  வள்ளியூரில் போலீஸ் விசாரணையின் போது மர்மமான முறையில் இறந்த முன்னாள் பெண் கவுன்சிலர் லீலாபாய் உடல் நாகர்கோவிலில் ஒழுகினசேரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் பயர்மேனாக வேலை பார்த்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் மீது சிறுமி ஒருவரை சில்மிஷம் செய்ததாக வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர் பதுங்கியிருந்ததாக கூறப்படும் குமரி மாவட்டம் கப்பியறை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்  லீலாபாய் (45), என்பவரது வீட்டிற்கு வந்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு கிறிஸ்டோபர் இல்லாததால் அங்கிருந்த லீலாபாயை அழைத்து சென்று வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் வள்ளியூர் குற்றவியல் நீதிபதி அலீமா முன்னிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லீலாபாய் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து அவரது உடல் அங்கு நின்றிருந்த அவரது மகன் வினில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட வில்லை. இரவோடு இரவாக நாகர்கோவில், ஒழுகினசேரியில் பழையாற்றின்கரையில் உள்ள சுடுகாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு 10.05 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

இறுதி சடங்கு நிகழ்வில் அவரது மகன் வினில்குமார், அவரது மனைவி, குழந்தை ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். வேறு உறவினர்கள், ஊர்மக்கள் யாரும் வருகை தரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் லீலாபாய் மகளிர் போலீசாரால்  தாக்கப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும். அதே வேளையில் லீலாபாய் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.₹25 லட்சம் வழங்க வேண்டும் தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க மாநில ெசயலாளர் ெஜயசிங் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்து மனுவில் கூறியிருப்பதாவது:கருங்கல் பகுதியை சேர்ந்த லீலாபாய் வழக்கு ஒன்றில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். விசாரணையின் போது லீலாபாய் மர்மமான முறையில் இறந்தார். வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை. பொறுப்பு இன்ஸ்பெக்டராக வள்ளியூர் குற்றப்பிரிவு இன்ஸ்ெபக்டர் பணியாற்றி வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.போக்சோ வழக்கில் தொடர்புடைய கிறிஸ்டோபர் என்பவரை பற்றி விசாரித்து வந்த வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். லீலாபாய் குடும்பத்திற்கு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட காவலர்கள் உடனே பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...