×

திருப்பத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்புதாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா தாசில்தார் சமரசம்

திருப்பத்தூர், ஆக.14: திருப்பத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அருகே உடையா முத்து ஊராட்சியில் மாங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான 72 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி மக்கள் கோயில் கட்டியும், பஸ் திரும்பும் இடமாகவும், கரக பூஜை செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் 16 சென்ட் நிலத்தை முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பழனியிடம் தட்டிக் கேட்டதுடன், இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தாரிடம் புகார் செய்தனர். பின்னர், போலீசார் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்வேயர் மூலம் நிலம் அளவீடு செய்தனர். அதில், அந்த நிலம் கிராம நத்தம் புறம்போக்கு என்பது தெரியவந்தது. இதற்கிடையில், அந்த 16 சென்ட் நிலத்திற்கு தனக்கு பட்டா வழங்குமாறு பழனி, திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, பழனிக்கு பட்டா வழங்குவதாக தகவல் வெளியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாங்குப்பம் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 1 மணியளவில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு பட்டா வழங்கக் கூடாது என கூறி முழக்கமிட்டனர். அப்போது, தாசில்தார் அனந்தகிருஷ்ணன் வெளியில் சென்றிருந்தார். ஆனால், அவர் வரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த தாசில்தார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது தாசில்தார், உரிய விசாரணை செய்து, அந்த நிலம் அரசுக்கு சொந்தமான இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில், பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த தர்ணா போராட்டத்தால் தாலுகா அலுவலகத்தில் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மாசு கட்டுப்பாட்டு அதிகாரி மனைவியின்...