×

மின் கசிவு காரணமாக குமரியில் சூப்பர் மார்க்கெட், பர்னிச்சர் கடையில் தீ

நாகர்கோவில், ஆக.11 :  நாகர்கோவிலில் நேற்று முன் தினம் நள்ளிரவில் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகின. நேற்று காலை கொல்லங்கோடு அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் சேதம் அடைந்தன.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் சூறை காற்றும், பலத்த மழை இருந்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மின் ஒயர்கள் அறுந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் வருவதும், போவதுமாக இருந்தன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து புகை வந்தது. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சூப்பர் மார்க்கெட் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு தலைைமயில், நிலைய அலுவலர் துரை மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்தனர். ஷட்டரை திறந்த போது புகை அதிகமாக வந்ததுடன், கடையின் ஒரு பகுதி தீ பிடித்து எரிந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த பலசரக்கு பொருட்களும் சேதம் அடைந்தன.

பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்டவையும் எரிந்தன. சேத மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தீ பிடித்தது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சற்று தாமதம் ஆகி இருந்தாலும் கூட பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மரம் முறிந்தது : இதே போல் ராஜாக்கமங்கலம் கம்பி பாலம் அருகே நேற்று அதிகாலையில் தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று மரத்தை வெட்டி அகற்றினர். பர்னிச்சர் கடையில் தீ  : கொல்லங்கோடு அருகே கச்சேரி நடையை சேர்ந்தவர் ரெஜின். இவர் சூழால் பகுதியில் வீட்டு உபயோக பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று  காலை அந்த கடையில் இருந்து புகை வந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் (பொறுப்பு) ஜெயக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று  தீயை அணைத்தனர். இதில் பர்னிச்சர் கடையில் இருந்த கேமரா மானிட்டர், யு.பி.எஸ். மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.12 அடி நீள பாம்பு சிக்கியது :  குளச்சல் பிரண்ட்ஸ் காலனி பகுதியில், ஜோஸ் என்பவரின் வீட்டு தண்ணீர்  தொட்டியில் சுமார் 7 அடியில் சாரை பாம்பு கிடந்தது. இது குறித்து குளச்சல்  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர், தேவராஜ்  தலைமையில் தீயணைப்பு படையினர் சென்று, அந்த பாம்பை பிடித்தனர்.Tags :
× RELATED கொரோனா அச்சுறுத்தல் கலெக்டர் அலுவலகத்தில் கை கழுவ தனி அறை