மாத்தூர் ஏரியை தூர்வாரும் பணிக்கு பணம், பொருள் வழங்கக் கூடாது

திருவொற்றியூர்: மணலி மாத்தூர் ஏரியை தூர்வாரும் பணிக்கு பொதுமக்கள் யாரும் தனியாருக்கு பணமோ, பொருளோ வழங்கக்கூடாது என்று கால்நடை பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மணலி அருகே  அமைந்துள்ள  மாத்தூர் ஏரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ளது. மழைக்காலத்தில் சுற்றுவட்டாரத்தில் பெய்யும் மழைநீர் இந்த ஏரியில் தேங்கும். இதனால் மழைநீர் சேமிப்பாக பயன்படுவதோடு நிலத்தடி நீர் பாதுகாக்கப்பட்டது. தற்போது இந்த ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து சகதியாக மாறி தூர்ந்துள்ளது.   மேலும் மழை பெய்யாததால் இந்த ஏரி நீர் இல்லாமல் வறண்டுள்ளது. இதனால் மழை காலத்திற்கு முன்னதாக இந்த ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கால்நடை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து கால்நடைத்துறையினர் வேளாண்மைத்துறை பொக்லைன் மூலம்    ஊழியர்களை கொண்டு மாத்தூர் ஏரியை தூர்வாரும் பணியில் கடந்த 3 தினங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூர்வாரும் பணியை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு தூர்வாரும் பணி செய்வதற்காக பொதுமக்கள் யாரும் பணம், பொருள் வழங்கக்கூடாது என்று அறிவிப்பு பலகையை வைத்தனர். இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’மழைநீரை சேமிக்கும் வகையில் மாத்தூர் ஏரியை முழுமையாக தூர்வாரும் பணியில் கால்நடை பல்கலைக்கழகம்  ஈடுபட்டு வருகிறது. தனியார் சிலர் தூர்வாரும் பணியை காரணம் காட்டி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வந்தன. அரசு நிதியிலேயே இந்த பணி நடைபெறுவதால் பொதுமக்கள் யாரும் இந்த தூர்வாரும் பணிக்காக பணமோ, பொருளோ வழங்கக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். இதையும் மீறி பணம் வசூலித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். 

Related Stories: