திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ₹98 லட்சம்

திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயில் ஆனி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கையாக ₹98 லட்சம் பக்தர்கள் செலுத்தினர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து, இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலைரை தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதுதவிர ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதன்படி இந்த மாத(ஆனி) பவுர்ணமி கடந்த 16ம் தேதி(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, மறுநாள்(17ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி இரவு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.

பவுர்ணமி முடிந்ததும் அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாத (ஆனி) பவுர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நேற்று நடந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இப்பணியில் 150 பேர் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ₹98 லட்சத்து 57 ஆயிரத்து 28, 187 கிராம் தங்கமும், 680 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

Tags :
× RELATED செங்கம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் சமரசம்