×

8 வழிச்சாலை, உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: 130 பேர் கைது

திருவண்ணாமலை, ஜூலை 19: திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டம், விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டம், விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டியக்கம் மற்றும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தலைவர் டி.கே.வெங்கடேசன், துணைத்தலைவர் பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அப்போது, 8 வழிச்சாலை திட்டத்திற்கும், விளைநிலங்களில் அமைக்கப்பட்டு வரும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் என 7 பெண்கள் உட்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை அவலூர்பேட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இதுகுறித்து மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் கூறியதாவது: திருவண்ணாமலை மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் இன்று (நேற்று) விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கை, உயர்மின் கோபுரத்தை விவசாய நிலத்தில் நிறுவக்கூடாது.
மின் வழித்தடத்தை விவசாய நிலங்களின் வழியாக கொண்டு செல்ல கூடாது. சாலையோரத்தில் தரைவழியாக மின் தடத்தை கொண்டு செல்ல வேண்டும். இதுவரை அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின் வழித்தடங்களுக்கு செல்போன் டவர்களுக்கு வழங்குவது போல் வாடகை வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு முடிவை உருவாக்கி உடனடியாக செயலுக்கு கொண்டு வரவேண்டும்.
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அரசு மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும். நீதிமன்றம் உத்தரவின்படி விவசாய நிலங்கள் கையகப்படுத்தியதை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல், விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய்கள் பதித்து விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை அனுதிக்க முடியாது. மாநில அரசு எங்களின் கோரிக்கை செவி கொடுத்து கேட்க வேண்டும்.ஆனால் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் கைது செய்துள்ளனர். ஜனநாயக நாட்டில் தமிழ்நாட்டில் ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவது என்பது ஏற்புடையது அல்ல. இதனை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...