உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை டாக்டர் முதன்முறையாக நியமனம்

உத்தமபாளையம், ஜூலை 18: உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு முதன்முறையாக அறுவை சிகிச்சை டாக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.உத்தமபாளையம் அரசுமருத்துவமனை 1922ம் ஆண்டு கட்டப்பட்டது. தாலுகா மருத்துவமனையாக உள்ள இங்கு தினந்தோறும் வெளிநோயாளிகள் பிரிவில் 800 முதல் ஆயிரம் நோயாளிகள் வரையிலும் உள்நோயாளிகளாக 75க்கும் மேற்பட்டவர்களும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகில் உள்ள அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், மேலசிந்தலைசேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் நோயாளிகள் வருகின்றனர். இங்கு தலைமை மருத்துவ டாக்டர், மற்றும் 6 டாக்டர்கள் பணியில் உள்ளனர். தவிர சிறப்பாக இயங்கிடும் சித்தமருத்துவ பிரிவும், இயற்கை யோகா பிரிவும் தனித்தனியாக இயங்கி வருகிறது. தலைமை டாக்டராக பணியாற்றிய பழனிச்சாமி பணி நிறைவு பெற்றார். இதேபோல் எம்.டி டாக்டர், மற்றும் மற்றொரு டாக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால் நோயாளிகள் பெரும் சிரமங்களை அடைந்தனர். இங்கு அறுவை சிகிச்சை அரங்கம் இருந்தும் எந்தவிதமான சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்தது.

இதனையடுத்து இங்கு டாக்டர்களை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இங்கு தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய பழனிசாமி இருக்கும்போதே காலிப்பணியிடங்களை நிரப்பிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.   
இதன் அடிப்படையில் இப்போது தமிழக அரசு அறுவை சிகிச்சை நிபுணராக (எம்.எஸ்) டாக்டராக கவுதமன் மற்றும் மயக்கவியல் டாக்டராக மனோஜ் ஆகியோரை பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்கு தேனிக்கோ, மதுரைக்கோ அனுப்பாத நிலை உண்டாகி உள்ளது. இதுகுறித்து உத்தமபாளையம் நகர் நலகமிட்டியின் செயலாளர் சலீம் கூறுகையில், `` நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க எம்.எஸ் மற்றும் மயக்கவியல் டாக்டர்களை நியமித்தது வரவேற்கதக்கது. இதேபோல் காலியாக உள்ள தலைமை மருத்துவ அதிகாரி பணியிடத்தையும், நோயாளிகள் நலன் கருதி டாக்டர்கள் பணியிடங்களை 9 ஆக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags :
× RELATED குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக...