×

சாலையை தோண்டுவதற்கு எதிர்ப்பு ஓ.பி.எஸ். பெயரை கூறி பொதுமக்களுக்கு மிரட்டல்

நாகர்கோவில், ஜூலை 18:  நாகர்கோவிலில் புதிதாக போடப்பட்ட சாலையை  தோண்டியதை தட்டிக்கேட்ட பொதுமக்களை ஓ.பி.எஸ். பெயரை கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவில் மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகர்கோவில் மணியடிச்சான் கோயில் சந்திப்பில் இருந்து மணிமேடை செல்லும் எஸ்.பி. அலுவலக சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன் புதிதாக போடப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு இந்த சாலையில் ஆங்காங்கே கேபிள் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். புதிதாக போடப்பட்ட சாலைகளை ஏன் தோண்டுகிறீர்கள் என்று அந்த பகுதி மக்கள் கேட்டனர். அப்போது இந்த பணியை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் உறவினர் எடுத்துள்ளார். எது வேண்டுமானாலும் அங்கே பேசுங்கள் என்று பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பணியை மேலும் தொடர விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இது பற்றி தகவலறிந்த காவல்துறையினர் அங்கு வந்து சாலையை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சாலையை தோண்ட உரிய அனுமதி உள்ளதா என்று கேட்டனர். ஆனால் அனுமதி பெற்று முறைப்படி பணிகள் நடக்காததால் குழிகளை தோண்டக்கூடாது என்று போலீசார் அவர்களை எச்சரித்தனர். ேமலும் தோண்டிய அந்த குழிகளை மூடி செல்லும்படி கூறினர். இதனை தொடர்ந்து புதிய சாலையில் குழி தோண்டியவர்கள் அதனை மூடி சென்றனர்.
 இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. பொதுமக்கள் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு இந்த சாலைகள் போடப்படுகிறது. எஸ்பி. அலுவலக ரோடும் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்கள் கழித்தே புதிதாக போடப்பட்டது. சாலை போடப்பட்ட 2 மாதங்களிலேயே மீண்டும் சாலையை ேதாண்டி நாசமாக்குகிறார்கள்.  சாலையை தோண்டுபவர்கள் அந்த பணி முடிந்த பின், காங்கிரீட் போட்டு சாலையை சமன் செய்ய வேண்டும். ஆனால் வெறும் மணலை மட்டும் நிரப்பி செல்வதால் விபத்து நடக்கிறது. இதை தட்டி கேட்டதால், துணை முதல்வர் பெயரை கூறி மிரட்டும் வகையில் பேசுகிறார்கள் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...