திண்டிவனம் ராஜாங்குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது

திண்டிவனம், ஜூலை  18: திண்டிவனத்தில் ராஜாங்குளத்தை தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணிகள் நகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் துவங்கியது. இதில் 100க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். டெல்லியில் இருந்து வந்திருந்த நீர்வள மேலாண்மை சிறப்பு அலுவலரான ஐஏஎஸ் அரவிந்த் சரண் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். திண்டிவனம் நகரத்திற்கு  நீராதாரமாக விளங்கும் ராஜாங்குளம், காவேரிப்பாக்கம் ஏரி, கிடங்கல் ஏரி போன்றவைகள் அமைந்துள்ளன.  தற்போது தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் ஏற்பட்டுள்ள கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு  நீராதாரமாக விளங்கிய 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராஜாங்குளம் புதர் மண்டிய நிலையில் கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் நேற்று ராஜாங்குளத்தை தூய்மைப்படுத்தும்  பணிகளை  நகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில் திண்டிவனம் நகராட்சி ஊழியர்கள் மற்றும் ஜேசிபி உதவியுடன்  குளத்தில் புதர்மண்டி கிடந்த முட்புதர்களை அகற்றியும் குளத்தில் ஆக்கிரமித்து இருந்த ஆகாயதாமரை செடிகளை அகற்றியும், ஆழப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.இந்த பணிகளை டெல்லியில் இருந்து வந்திருந்த நீர்வள மேலாண்மை சிறப்பு அலுவலரான ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த் சரண் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.மேலும் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும்  பணிகளை சார் ஆட்சியர் மெர்சி ரம்யா துவக்கி வைத்து தூய்மை பணியில் ஈடுபட உள்ளார். ஆகையால் இன்று முதல் ஜேசிபி வாகனங்கள் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் டிப்பர் லாரிகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி குளத்தை தூர்வாரி அழகு படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags :
× RELATED சங்கராபுரம் அருகே ஓடையில் வாலிபர் சடலம்