×

ஆண்டிபட்டி வெண்டைக்கு வெளிநாட்டில் மவசு கம்பத்தில் ஒரே வளாகத்தில் இரண்டு அலுவலகங்கள் வனத்துறையினரிடையே மோதல் போக்கு

கம்பம், ஜூன் 27: கம்பத்தில் ஒரே வளாகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு வனச்சரக அலுவலகங்கள் அமைந்துள்ளதால், அலுவலக நடைமுறை சிக்கலால் வனத்துறையினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்ட வனப்பகுதி 1088.51 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பெரும்பாலான இடங்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் மேகமலை வன உயிரினச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மேகமலை வன உயிரின சரணாலயம் தொடங்கியவுடன் ஒரே சரகமாக இருந்த கம்பம் வனச்சரகம் கம்பம் கிழக்கு, கம்பம் மேற்கு என பிரிக்கப்பட்டது. இதில் கிழக்கு வனச்சரகம் சரணாலய நிர்வாகத்திலும், மேற்கு சரகம் மாவட்ட வனத்துறை நிர்வாகத்திலும் உள்ளது. இதற்கான இரண்டு அலுவலகங்களும் கம்பத்தில் ஒரே வளாகத்தில் உள்ளது.

இந்நிலையில், கம்பம் கிழக்கு வனச்சரகராக புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி, வனச்சரகத்தின் பிரதான கதவை பூட்டி வைக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பிரதான கதவு மூடப்பட்டதால் மேற்கு வனச்சரக வனத்துறையினர் தற்போது கிழக்கு வனத்துறை ஊழியர்களிடம் அனுமதி பெற்று உள்ளே செல்கின்றனர். இந்த நிகழ்வு மேற்குசரக வனத்துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக கம்பம் கிழக்கு, மேற்கு வனச்சரகத்திற்கான அலுவலகம், ஒரே வளாகத்தில் தான் இயங்கி வருகிறது. ஆனால் தற்போது இந்த வனத்துறை அலுவலக வளாகம் மேகமலை வன உயிரின சரணாலய (கம்பம் கிழக்கு) எல்லை பகுதியில்தான் உள்ளது, மேற்கு வனச் சரகத்தினர் அவர்களுக்குரிய இடத்தில்தான் அலுவலகம் அமைக்க வேண்டும் என கூறுகின்றனர். எனவே மாவட்ட வனத்துறை உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, வனத்துறையினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கை நிறுத்தவேண்டும்’ என்றனர்.


Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு