×

செல்போனில் நேரத்தை செலவிட்டு பெற்றோரை ஏமாற்றாதீர்கள்

திருப்பூர், ஜூன் 26: ‘‘முகநூல் மற்றும் செல்போன்களில் நேரத்தை செலவிட்டு பெற்றோர்களை தயவு செய்து ஏமாற்றாதீர்கள்,’’ என கல்லூரி மாணவிகளுக்கு, மாநகர போலீஸ் துணை கமிஷனர் அறிவுரை கூறினார்.திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, சர்வதேச நீதிப்பணி மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில், ‘மனித கடத்தலுக்கு எதிரான மன்றம்’ துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்றார். சர்வதேச நீதிப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாலமன் ஆண்டனி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கந்தசாமி பிரபு, விழுதுகள் அமைப்பின் இயக்குனர் தங்கவேலு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரன் பேசியதாவது:  குழந்தைகளையும், பெண்களையும் விருப்பமின்றி அழைத்து செல்வது, கொத்தடிமையாக நடத்துவது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, வீட்டு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துவது பல இடங்களில் நடந்து வருகிறது. ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தினால் அது கடத்தல் தான். இதுபோன்ற செயல்களை ஒரு தனிநபர் மட்டும் செய்ய முடியாது. ஒரு கும்பல் ஒருங்கிணைந்து செய்வார்கள். வெளிநாட்டுக்கு சென்றால் வேலை கிடைக்கும் என்று பொய் சொல்லி பெண்களை அழைத்து சென்று, பாலியல் தொழிலில் சிக்க வைத்துவிடுவார்கள். இதுபோன்று பாதிப்புக்குள்ளாகுபவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மனித உரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி, அவர்களை எந்த வேலையிலும் ஈடுபடுத்தக்கூடாது. தலைமுறை, தலைமுறையாக சிலர் ஒருவரிடம் மட்டுமே வேலை செய்து வருவார்கள் அது கொத்தடிமை முறையாகும். வாங்கியதை விட உழைப்பை அதிகம் சுரண்டுவது தான் கொத்தடிமை முறையாகும். இதில் இருந்து சாதாரணமாக யாரும் மீள முடியாது. காரணம் வாங்கிய கடனை எப்போதும் கட்ட முடியாத நிலை உருவாகி விடும். கொத்தடிமை முறை மிகவும் கொடுமையானது.

பணத்திற்கு ஆசைப்பட்டு சிலரும், வறுமையில் சிலரும் முதியவர்களுக்கு சிறுமிகளை கட்டாய திருமணம் செய்து வைப்பது வட மாநிலங்களில் அதிக அளவில் நடந்து வருகிறது. இதேபோல் குழந்தைகளை கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்துவது, அவர்களை கடத்தி போய் பிச்னை எடுக்க வைப்பது என குழந்தை எதிரான குற்றங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது.  தமிழகத்தில் சிவகாசியில் அதிக அளவில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். பெற்றோர் அவர்கள் குறித்து எந்த கவலையும் படுவதில்லை. மேலும், சில தீவிரவாத குழுக்கள், அவர்களது கொள்கைகளை நியாயப்படுத்தி, சிறுவர்களை தவறான பாதைகளுக்கு அழைத்து சென்றுவிடும் சம்பவங்களும் நடக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் முகநூல் மற்றும் செல்போன்களில் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். முகநூல் மூலம் அறிமுகம் ஆகும் நபர் யார்? என்ன படித்துள்ளார்? என்ன தொழில் செய்கிறார்? அவர் எப்படிப்பட்டவர் என தெரியாமலேயே காதலித்து ஏமாந்து வருகிறார்கள். நான் சொல்லிய அனைத்தும் சமூகத்தில் நடந்து வரும் சம்பவங்கள் தான். ஆகவே, முகநூல் மற்றும் செல்போன்களில் நேரத்தை செலவிட்டு பெற்றோர்களை தவவு செய்து ஏமாற்றாதீர்கள். இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து போராடாமல், நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
இவ்வாறு பிரபாகரன் பேசினார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்