×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுர கொடிமங்கை சிற்பத்தில் விரிசல் இயற்கை முறையில் சீரமைப்பு பாதிப்பில்லை என ஸ்தபதி விளக்கம்

திருவண்ணாமலை, ஜூன் 26: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுர பக்கவாட்டு தூண் கொடிமங்கை சிற்பத்தில் ஏற்பட்டுள்ள சிறு விரிசலை, இயற்கை முறையில் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், 4 திசைகளிலும் பிரதான கோபுரங்கள், உட்பிரகாரங்களில் 5 சிறிய கோபுரங்கள் என நவகோபுரங்களை கொண்ட சிறப்புக்குரியது.
ராஜ கோபுரம் 217 அடி, பே கோபுரம் 144 அடி, அம்மணி அம்மன் கோபுரம் 171 அடி, திருமஞ்சன கோபுரம் 157 அடி உயரமாகும். இந்த 4 கோபுரங்களும் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரே மாதிரியான கட்டமைப்பை 4 கோபுரங்களும் கொண்டிருப்பது இவற்றின் தனிச்சிறப்பாகும்.  இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் வடக்கு கோபுரம் எனப்படும் அம்மணி அம்மன் கோபுரத்தின் பக்கவாட்டு கற்தூணில், கொடிமங்கை சிலை அமைந்துள்ள பகுதியில் லேசான விரிசல் இருப்பது கடந்த 2002ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக திருப்பணியின்போது தெரியவந்து, சீரமைக்கப்பட்டது.

ஆனாலும், பக்கவாட்டு தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் காலப்போக்கில் அதிகரித்ததால், இந்த விரிசலை சரி செய்யும் முயற்சியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டது. எனவே, அறநிலையத்துறை பொறியாளர் மற்றும் ஸ்தபதியை வரைவழைத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு செய்தது. அதைத்தொடர்ந்து, இந்த விரிசலை ஆரம்ப நிலையிலேயே, கடுக்காய் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.  அதன்படி, விரிசல்கள் சரிசெய்யும் பணிகள் நேற்று நடந்தது. இப்பணியில் அறநிலையத்துறை விழுப்புரம் மண்டல ஸ்தபதி ஜெகன்நாதன், உதவி பொறியாளர் சீனுவாசன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.இது குறித்து, ஸ்தபதி ஜெகன்நாதன் கூறியதாவது:

அதிக எடையுள்ள கற்களின் தொடர் அழுத்தத்தால், கொடிமங்கை சிற்பத்தில் லேசான விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும், இந்த நிலையிலேயே சிரமைப்பது நல்லது. எனவே, கடுக்காய், வெல்லம், வில்வங்காய் போன்றவற்றை கூழாக்கி, அதில் கருங்கல் தூள், சுண்ணாம்பு போன்ற இயற்கை கலவையின் மூலம், விரிசல் சீரமைக்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தின்போது, அஷ்டபந்தனம் சாத்துவதைப் போன்ற நடைமுறையே இதிலும் பின்பற்றுகிறோம். இவ்வாறு சீரமைத்தால் நூற்றாண்டுகள் வரை எந்த பாதிப்பும் இருக்காது. விரிசல் சீரமைத்த தடயமும் தெரியாது என்றார்.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...